சென்னை: ரூ.12 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையருக்கு  நெல்லை மாநகராட்சியில் பணி வழங்கப்பட்டு இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு  பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரூ.12 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை இடைநீக்கம் செய்து, கைது செய்து நடவடிக்கை எடுக்காமல். அவருக்கு பதவி உயர்வு வழங்கி உள்ள திமுக அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர் அந்த பகுதியில்  கட்டிடங்கள் புனரமைப்பதற்கு அனுமதி வழங்குவது, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு அதிக கமிஷன் பெறுவதாக ஜஹாங்கீர் பாஷா மீது அதிகம் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதைத்தொடர்ந்து, அவர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினரும், லஞ்ச ஒழிப்பு துறையினர் காத்திருந்த நிலையில், நவம்பர் 10ந்தேதி அன்று   மாலை 5.30 மணியளவில் ஊட்டியில் இருந்து தனியார் வாடகை காரில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக ஊட்டி-கோத்தகிரி சாலையில் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர், சிலரிடம் லஞ்சம் பணம் பெற்று கொண்டு செல்வதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அந்த காரை விரட்டி சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கி சோதனையிட்டனர். அப்போது அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் இருந்தது தெரிய வந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷாவை ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று சுமார் 13 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது அலுவலக அறையில் இருந்து ஏராளமான ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து அவர் மீது ஊழல் தடுப்புச்சட்டம் பிரிவு 7-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், . அவர் நகராட்சி கமிஷனர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஆனால் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், திடீரென ஜஹாங்கீர் பாஷாவுக்கு நெல்லை மாநகராட்சியில் பணி வழங்கப்பட்டு உள்ளது. அவரை *திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமித்து,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட *ஜஹாங்கீர் பாஷாவுக்கு இரண்டே வாரத்தில் புதிய பணி ஒதுக்கப்பட்டத* சலசலப்பை ஏர்படுத்தியுள்ளது. அவர்மீதான ஊழல் குற்றச்சாட்டு என்னவானது, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லஞ்சப்பணம் யாருடையது என எந்தவொரு தகவலும் தெரிவிக்காமல் அவருக்கு திடீரென பதவி உயர்வு வழங்கப்பட்டு இருப்பது   சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பல லட்சம் லஞ்சப்பணத்துடன் கைது செய்யப்பட்ட ஒரு அதிகாரியை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டிய மாநில அரசு, அவருக்கு மாநகராட்சியில் பணி உயர்வு வழங்கப்பட்டிருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இநத் நிலையில், ரூ.12 லட்சம் லஞ்சப் பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையருக்கு  நெல்லை மாநகராட்சியில் பணி வழங்கப்பட்டு இருப்பதற்கு பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தொட்டபெட்டா சந்திப்புக்கு அருகில் ஜகாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்த மகிழுந்தை கடந்த 10-ஆம் நாள் கையூட்டுத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடமிருந்து ரூ.11.70 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அதை நான்கு தரப்பினரிடமிருந்து அவர் வசூல் செய்து தமது சொந்த ஊருக்கு எடுத்துச் சென்றதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் குடியிருப்பு பயன்பாட்டில் இருந்து வணிக பயன்பாட்டுக்கு வரி இனத்தை மாற்றிக் கொடுத்ததற்காக ரூ.2.49 லட்சம், சேரிங் கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன நிறுத்த உரிமம் வழங்கியதற்காக ரூ.2 லட்சம், பாரதியார் வணிக வளாகத்தில் துணிக்கடையை உணவு விடுதியாக மாற்றியதற்காக ரூ.2.50 லட்சம், தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தின் வரியை குறைத்து நிர்ணயம் செய்ததற்காக ரூ. 4.71 லட்சம் கையூட்டு வசூலிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. அவர் பயணம் செய்த மகிழுந்தை ஓட்டி வந்த ஓட்டுனரும் ஜஷாங்கீர் பாஷா கையூட்டு வாங்கியதை உறுதி செய்தார்.

ஜஹாங்கீர் பாஷாவுக்கு எதிராக இவ்வளவு ஆதாரங்கள் இருக்கும் நிலையில் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டும்; பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், விசாரணைக்குப் பிறகு அவரை சுதந்திரமாக நடமாட அனுமதித்த தமிழக அரசு, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இப்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி ஆணையராக நியமித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் இது அவர் ஏற்கனவே வகித்த பதவியை விட அதிகாரம் மிக்கதாகும்.

ரூ.500 கையூட்டு வாங்கியதற்காக பல கிராம நிர்வாக அலுவலர்களும், கடை நிலை ஊழியர்களும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ரூ.11.70 லட்சம் கையூட்டு வாங்கியதுடன், அதற்கான சான்றுகளும் தெளிவாக இருக்கும் நிலையில் ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்காமல் அதிகாரம் மிக்க பதவியை வழங்குவதன் மூலம் தமிழக அரசு சொல்லவரும் செய்தி என்ன? இப்படித்தான் ஊழலை ஒழித்து அரசு நிர்வாகத்தை தூய்மைப்படுத்தப் போகிறதா? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். கையூட்டு வாங்கிய ஜஹாங்கீர் பாஷாவை உடனடியாக கைது செய்வதுடன், அவரை பணியிடை நீக்கமும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.