டெல்லி: பரந்தூர், ஓசூர் விமான நிலையங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருப்பதாக திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  நேற்றைய அமர்வின்போது மாநிலங்களவையில் திமுக எம்.பி. கிரிராஜன் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய  சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொகல் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியிருப்பதாவது,

இதற்கு பதில் கூறிய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மொகல்,  காஞ்சிபுரம் மாவட்டம்   பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான தள அனுமதி கடந்த ஆகஸ்டு மாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொள்கை ஒப்புதலுக்கான விண்ணப்பம் டிட்கோவிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. மேலும் ஓசூரில் பசுமை விமான நிலையத்துக்காக முன்மொழியப்பட்ட 4 தளங்களை விமானநிலைய ஆணைய அதிகாரிகள் மற்றும் டிட்கோ அதிகாரிகளைக் கொண்ட குழு கடந்த செப்டம்பர் மாதம் ஆய்வு செய்தது. அந்த பகுதியில் விமானப்படை மையம் இருப்பதை கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் கலந்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் தள அனுமதியை வழங்க நிபந்தனைகளுடன் தடையில்லா சான்று வழங்கி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.