சென்னை: மத்தியஅரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் என்பதால், அந்த #விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது; என்றும், சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஏற்கனவே, விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், அதன் வழிகாட்டி விதிமுறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, இத்திட்டம் சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை பெறும் வகையில், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் குழு அமைத்துள்ளது.
இந்தக்குழுவில், தி.மு.க., – எம்.எல்.ஏ., எழிலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். குழு ஒருங்கிணைப்பாளராக தொழில் துறை செயலர் அருண்ராய் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஸ்கர்மா திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் செப்டம்பர் 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்., PM விஸ்வகர்மா யோஜனா திட்டம், இது நாடு முழுவதும் உள்ள பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினை தொழில்களை ஊக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு, பாரம்பரிய கைவினை மற்றும் திறன்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அரசு ஆதரவை வழங்குவதற்காக, பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை தலைநகர் டெல்லியில் தொடங்கி வைத்தார்.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய சமூகங்களை – குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) குழுக்களை சென்றடைவதற்கான ஒரு வழிமுறையாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விஸ்வகர்மா திட்டம் 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி செய்பவர், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம், குரு – சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்துவதே . மேலும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதும் நோக்கம் என்றும் கூறப்படுகிறது..
இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேர்ந்தால், அந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது.
மேலும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாளை மறுதினம் பிரதமர் நரேந்தி மோடியால் விஸ்வகர்மா திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குலத்தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என்றும், குலகல்வியின் மறுவடிவம் தான் இந்த திட்டம் என்றும் விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில்முறையை ஊக்குவிக்கும் என்பதால், அந்த #விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது; என்றும், சமூகநீதி அடிப்படையில், தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு என ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.27) கடிதம் எழுதியுள்ளார். அதில், இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் 4-1-2024 நாளன்று இந்தியப் பிரதமருக்கு தான் எழுதியிருந்த கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.
ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்திட தமிழக அரசின் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு விரிவான ஆய்வினை மேற்கொண்டு, இத்திட்டத்தில் கீழ்க்காணும் மாற்றங்களைச் செய்திடப் பரிந்துரைத்துள்ளது. அவற்றை பிரதமரின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
கிராமப்புறங்களில் பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்பு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு பதிலாக, வருவாய்த் துறையைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைத்திருந்தது. ஆனால், மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்திலிருந்து 15-3-2024 அன்று வரப்பெற்ற பதிலில், மேற்படி பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.
எனவே, பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தற்போதைய வடிவில் செயல்படுத்துவதை தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லாது. இருப்பினும், சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கொள்கையின்கீழ் தமிழகத்தில் உள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டாத கைவினைஞர்களை உள்ளடக்கி, விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு செயல்படுத்தவிருக்கும் இந்தத் திட்டம், சாதி மற்றும் குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழுமையான ஆதரவை அளிக்கும். இத்தகைய திட்டம் அவர்களுக்கு நிதி உதவி, பயிற்சி மற்றும் அவர்களின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் விரிவாக உள்ளடக்கியதாக இருக்கும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.