சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள  காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  நாளை ஃபெங்கல் புயலாக மாறுகிறது. இதன் காரணமாக  சென்னை உள்பட 16 மாவட்டங்களில் நாளை  கனமழை பெய்ய வாப்பு உள்ளதாக சென்னை  வானிலை ஆய்வு மைய தென்மண்டல  இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக,  அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறும் என்றவர், இந்த புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை என்றவர்,  அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை,  சென்னை உள்பட 16 மாவட்டங்களில்  மிக கனமழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 15ந்தேதி  வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழ்நாடு முழுவதும்  பரவலாக பெய்து வருகிறது. இருந்தாலும் ஏரி குளங்கள் நிரம்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அவ்வப்போது மேலடுக்கு சுழற்சியின் காரணமாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலில் உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுவடைந்துள்ளது. தற்போது,  இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை திரிகோண மலையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 340 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென் கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்து.

தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 8 கிலோ மீட்டர் முதல் 10 கி.மீ வேகத்தில் டெல்டா மாவட்டங்களை  நோக்கி நகர்ந்து வந்த நிலையில்,   இன்று காலை வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அப்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம் நாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கே 630 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு- வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து நாளை ஃபெங்கல் சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது அதன் பிறகு அடுத்த 2 நாட்களில் வடக்கு- வடமேற்கு திசையையில் நகர்ந்து இலங்கையை தொட்டு தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில்  சென்னை அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை வரை  மழை பெய்யக்கூடும்.   இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் கனமழை பெய்யும் என்றும்,  சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. வருகிற 30-ந்தேதி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.