சென்னை: தமிழ்நாட்டில் ஊட்டி மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 4 நாள் பயணமாக நாளை ஊட்டி வருகை தருகிறார். இதையொட்டி, இன்றுமுதல் அந்த பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புகளும் பலப்படுத்தப்பட்டுள்து.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நாளை (புதன்கிழமை) தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர், . பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டி சென்று அங்குள்ள ராஜ்பவனில் இரவு தங்குகிறார்.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை)  கார் மூலமாக குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு செல்லும் குடியரசு தலைவர்,   அங்கு போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார். தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிகாரிகள் மத்தியில் பேசுகிறார்.

நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் ஊட்டி ராஜ்பவன் சென்று தங்குகிறார்.

இதையடுத்து 29-ந் தேதி ஊட்டி ராஜ்பவனில் தங்கி ஓய்வெடுக்கும் அவர்,  வரும்  30-ந் தேதி காலை ஹெலிகாப்டர் மூலமாக கோவை சூலூர் விமானப்படை தளம் வருகிறார். அங்கிருந்து திருவாரூர்  சென்று, அங்கு  மத்திய பல்கலைக்கழகத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். அதன்பின்னர் திருச்சி விமான நிலையம் வந்து, மீண்டு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

குடியரசு தலைவர்  வருகையை முன்னிட்டு நீலகிரி மற்றும் திருவாரூர்  மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரி, ராணுவ பயிற்சி மையம், தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம், ஊட்டி ராஜ்பவன் மாளிகை, திட்டுக்கல்-ராஜ்பவன் மாளிகை சாலை, ஊட்டி-குன்னூர் சாலை, குன்னூர் வெலிங்டன் ராணுவ வைக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.  பாதுகாப்பு பணியில்,  மாவட்டம் முழுவதும் 1000 போலீசார்   ஈடுபட உள்ளனர். மேலும் வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன்,   ரோந்து, கண்காணிப்பு  பணிகளும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

குடியரசு தலைவர்   வந்திறங்க உள்ள ஊட்டி,  தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு சுழற்றி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி, நேற்று அங்கு ஹெலிகாப்டர் ஒத்திகையும் நடந்தது.  இதை  முன்னிட்டு நேற்று முதல் 6 நாட்களுக்கு நீலகிரியில் டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வருகையின் போது, காலநிலை மாற்றம் ஏற்பட்டால், ஹெலிகாப்டர் தரையிறங்க மசினகுடியில் உள்ள ஹெலிபேடை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.