சென்னை

ன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

கடந்த அக்டோபர் 25 அன்று தமிழகத்தில் வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும்.

இக்காலக்கட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்துவது, முகவரி மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க தமிழகம் முழுவதும் இன்று  சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

முன்பு 18 வயது முடிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பித்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நிலை இருந்தநிலையில் தற்போது 17 வயது முடியும்போது, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கு18 வயது பூர்த்தி ஆன பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு விடும்.  மேலும் 18 வயது முடிந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் தங்கள் பெயரை சேர்க்கலாம்.

முகாம் நடக்கும் காலங்களில் வாக்காளர் பட்டியலில் கூடுதல் இடங்களில் பெயர் பதிவு இருந்தால் அதை நீக்குவது, திருத்தங்கள், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு போன்ற வசதிகளை பெறுவதற்கான படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கிருக்கும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  அலுவலக நாட்களில் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளிக்கலாம்.

இதை. www.voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மற்றும்’ வாக்காளர் உதவி’ கைபேசி செயலி மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.