சென்னை: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறிய விசிக தலைவர், மக்கள் அங்கீகாரத்துடன் ஆட்சியில் அமர்வோம் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். அதுபோல விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பாலியல் சம்பவங்கள், போதை பொருள் நடமாட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக சாடி வருகின்றன. ஆனால், திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து வாய் திறக்க மறுத்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பழனிக்கு வருகை தந்த திருமாவளவன், இன்று அதிகாலை யிலேயே பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பின்னர், இ மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்திற்கு சென்ற திருமாவளவன் தொட்டிச்சி அம்மனை வழிபாடு செய்தார். அதன்பின் போகர், பழனி ஆதினம், சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்திற்கு சென்றார். அங்கு புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக சட்டம் ஒழுங்கு மற்றும் நேற்று ஒரே நாளில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது. இந்த சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது.
இதுபோன்ற செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்குச் செல்வதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.1900 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்தது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என தெரியவில்லை. அவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மட்டுமாவது அனுமதி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனி பகுதியில் உள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதையும் மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.
ஆட்சி அதிகாரத்தில் வி.சி.க. பங்கேற்குமா என்ற கேள்விக்கு, இதுகுறித்து கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்து அவரது சொந்த கருத்து என்றவர், ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, எங்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஒத்துழைப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்றவர், அவ்வாறு தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது அது நிறைவேறும் என்றார்.
இதைத்தொடர்ந்து, விஜய் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளாரே என்ற கேள்விக்கு, பதில் தெரிவிக்க மறுத்த திருமா வணக்கம் என கூறிவிட்டு பேட்டியை முடித்துவிட்டு சென்றார்.
இந்துக் கோயில்கள் ‘அழுக்கு சிலைகள்/பொம்மைகள்’ உள்ள இடங்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்து வரும், விசிக கட்சியின் தலைவரான திருமாவளவன், இன்று பழனி கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்ததுடன், புலிப்பானி சித்தரின் ஆசியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.