சென்னை: நோயாளியின் உறவினரின் கத்தியால் குத்ததப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன் . இவரை கடந்த நவம்பர் 13ஆம் தேதி விக்னேஷ் எனும் இளைஞர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மருத்துவரின் முறையற்ற நடவடிக்கை காரணமாகவே நோயாளியின் உறவினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது- தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மருத்துவர் பாலாஜியை நோயாளியின் மகன் விவரம் கேட்ட நிலையில், அதற்கு முறையான பதில் தெரிவிக்காமல், ஏனோதானோவென்று பேசியதால், ஆத்திரமடைந்த இளைஞன் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இச்சம்பவத்தில் குற்றவாளி விக்னேஷ் கைது கிண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விக்னேஷுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில், மருத்துவர் பாலாஜி, சென்னையில் உள்ள பிரபலமான காவேரி மருத்துவமனையிலும் பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. அரசு மருத்துவர்கள் வேறு மருத்துவமனையில் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி மருத்துவர் பாலாஜி பல மருத்துவமனைகளில் எப்படி பணியாற்றி வருகிறார் என்றும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கத்தி குத்துவால் பாதிக்கப்பட்டு கிண்டி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜி இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஜே.ஜே நகரில் உள்ள அவரது வீட்டில் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.