சென்னை: கார்த்திகை தீபத்திருவிழாயையொட்டி திருவண்ணாமலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி தொடங்கி 17ந்தேதிவரை நடைபெற உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகர தீபமும் ஏற்றப்படு கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக,  டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் உலா நடைபெற உள்ளது.

இந்த தீபத்திருவிழாவில் சுமார் 35 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தலைமைச்செயலாளர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் 10.12.2024 அன்று திருத்தேர் திருவிழா மற்றும் 13.12.2024 அன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு நேற்று (14.11.2024) தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இதில் விழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. அப்போது பக்தர்களுக்கு போதிய போக்குவரத்து, குடிநீர், மருத்துவம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து துறைகளுக்கும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.

திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கூடுதலான பேருந்துகள் மற்றும் இணைப்பு சிற்றுந்துகள் இயக்கவும் கூடுதலான தொடர்வண்டி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த விழிப்புணர்வு விளம்பரங்களை முன்னதாகவே பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், அரசு முதன்மைச் செயலாளர்கள், உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை, வருவாய் துறை, போக்குவரத்து துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உள்ளாட்சி துறை, சுகாதாரம் குடும்ப நலத்துறை மற்றும் பொதுத்துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல் துறை இயக்குநர், காவல் துறை தலைவர் நுண்ணறிவு, காவல் துறை தலைவர் வடக்கு மண்டலம், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல் கண்காணிப்பாளர் , மாநகராட்சி ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா அட்டவணை

01.12.2024 அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவம்

02.12.2024 அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்

03.12.2024 அருள்மிகு விநாயகர்,சந்திரசேகர் உற்சவம்

04.12.2024 கொடியேற்றம்-வெள்ளி வாகனம்,சிம்ம வாகனம்

05.12.2024 தங்க சூரியபிரபை வாகனம், வெள்ளி இந்திர விமானங்கள்

06.12.2024 சிம்ம வாகனம், வெள்ளி வாகனம்

07.12.2024 வெள்ளி காமதேனு வாகனம்

08.12.2024 வெள்ளி ரிஷப வாகனம்

09.12.2024 வெள்ளி ரதம்

10.12.2024 மகா ரதம்

11.12.2024 பிச்சாண்டவர் உற்சவம், குதிரை வாகனம்

12.12.2024 கைலாச வாகனம், காமதேனு வாகனம்

13.12.2024 பரணி தீபம் மற்றும் மகா தீபம்

14.12.2024 தெப்பல் உற்சவம்-சந்திரசேகர்

15.12.2024 தெப்பல் உற்சவம்-அண்ணாமலை

16.12.2024 தெப்பல் உற்சவம்-சுப்பிரமணியர்

17.12.2024 சந்திரசேகர் உற்சவம்