சென்னை: போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் விவகாரத்தில் தொடர்புடைய டைரக்டர் அமீர் , அவரது மனைவி, சகோதரர் உள்பட 12 பேர் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர், மனைவி அமீனா பானு, திரைப்பட இயக்குனர் அமீர் உட்பட 12 பேர் மீதும் மற்றும் எட்டு நிறு வனங்கள் மீதும் அமலாக்கத் துறை சென்னை சி.பி.ஐ., கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில் போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தில் அமீரும் பலனடைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மார்ச் 9ல் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர். இந்த விவகாரத் தில் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரும் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
ஜாபர் சாதிக் சென்னை மேற்கு மாவட்ட முன்னாள் திமுக அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர். இவர் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வது மூலம் சம்பாதித்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில், பைனான்ஸ் என பல தொழில்கள் முதலீடு செய்துள்ளது தெரிய வந்தது.
ஜாபர் சாதிக், தமிழ் சினிமாவில் சில படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் டைரக்டர் அமீரை வைத்து படம் தயாரித்துள்ளதும், அவருக்கு ஓட்டல் தொடங்கி கொடுத்ததும் தெரிய வந்தது.
இந்த வழக்கில் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம், மனைவி பானு, சினிமா இயக்குநர் அமீர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அவர்களிடம் விசாரணை நடத்திய அமலாக்க துறையினர் ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீமை கைது செய்தனர். ஜாபர் சாதிக், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டன.
சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில், அமலாக்க துறையினர் 302 பக்க குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 18ல் தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையில், ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக் தம்பி முகமது சலீம் மற்றும் சினிமா இயக்குனர் அமீர் உட்பட 12 பேரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.