சென்னை: சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 14, 15 தேதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுகள் அதிகம் நடைபெறும் என்பதால், சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 14, 15 தேதிகளில் பத்திரப்பதிவு செய்யப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐப்பசி மாதத்தில் வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முகூா்த்த நாள்கள் வருகின்றன. இவ்விரண்டு நாள்களிலும் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. ஒரு பதிவாளா் உள்ள அலுவலகங்களில் 100-க்குப் பதிலாக 150-ம், இரண்டு பதிவாளா்அலுவலகங்களில் 200-க்குப் பதிலாக 300 டோக்கன்களும் விநியோகம் செய்யப்படும். அதிகளவில் ஆவணங்கள் பதிவாகும் 100 அலுவலகங்களில், 100-க்குப் பதிலாக 150 டோக்கன்களும், கூடுதலாக 4 தத்கல் டோக்கன்களும் வழங்கப்படும் என்று அமைச்சா் கூறினாா்.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் 12.11.2024 சென்னை, நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை அலுவலகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம் (ம) தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பதிவுத்துறையில் கடந்த 2023-2024 நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.10,511 கோடி. நிகழும் 2024-2025 நிதி ஆண்டில் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபர் மாதம் வரை) வருவாய் ரூ.11,733 கோடி. கடந்த நிதி ஆண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த நிதி ஆண்டின் அக்டோபர் மாதம் வரை கூடுதலாக ரூ.1,222 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இ
ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வருகின்ற 14.11.2024 (வியாழன்) மற்றும் 15.11.2024 (வெள்ளி) ஆகிய தினங்களில் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கூட்டத்தில் அமைச்சர், பதிவு செய்த ஆவணங்களை அதே நாளிலே திருப்பி ஒப்படைத்தல் (களப்பணி மேற்கொள்ள வேண்டிய ஆவணங்களை தவிர்த்து), ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தெரிவு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவிற்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல், நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல், உள்ளிட்ட பணிகளின் விவரங்களை கேட்டறிந்து, அனைத்து பணிகளையும் தொய்வில்லாமல் உடனுக்குடன் முடிக்குமாறு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள்/தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.