சென்னையில் பொது இடங்களில் கட்டுமான கழிவுகளைக் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் மற்றும் பொதுஇடங்களில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் கட்டுமான மற்றும் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகளை சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வாடகை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை பொருட்படுத்தாமல் பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகளில் கழிவுகளை கொட்டினால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் இந்த நடைமுறையை ஒழுங்குபடுத்த 1000 லாரிகளுக்கு அனுமதி வழங்குவதுடன் அதை செயல்படுத்துபவர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது.

இதற்கு விருப்பமுள்ள வாகன உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சென்னை மாநகராட்சி அவர்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறையை விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

தவிர, இந்த வகை கட்டுமான கழிவுகளை அகற்றும் லாரிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படும் என்றும் அடையாள அட்டை இல்லாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சியால் அந்தந்த மண்டலங்களில் வரையறுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இந்த கழிவுகளை கொட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.