டெல்லி: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 4ந்தேதி) மாலை வெளியானது.
2024ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் தற்போது (ஜூன் 4ஆம் தேதி) வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படத்த வரும் நிலையில், நீட் தேர்வு முடிவுகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுதினர். இதில் 12,730 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வில் பங்கேற்கும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டானது, மே 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வானது மே 5ஆம் தேதி தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2024ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு முடிவுகள் தற்போது (ஜூன் 4ஆம் தேதி) வெளியாகி உள்ளன. இதை மாணவர்கள் எப்படிக் காண்பது எனக் காணலாம்.
மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/NEET2024SC.html என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.
ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு முன்பே இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. . இதில், தேசிய அளவில், 80க்கும் மேற்பட்ட மாணவர்கள், 720க்கு, 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை வேலம்மாள் போதி கேம்பஸ் மாணவர் ஸ்ரீராம், 720க்கு, 720 மதிப்பெண் பெற்றுள்ளார். அதேபோல, சென்னை அண்ணா நகர் வேலம்மாள் பள்ளியை சேர்ந்த யூசுப் என்ற மாணவர், 720 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் படித்து, அரசின் இலவச பயிற்சி பெற்று, அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் விபரம், பள்ளிக்கல்வி துறையால் இன்று வெளியிடப்பட உள்ளது.