லண்டன் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற போயிங் 777-300ER விமானம் மோசமான வானிலை காரணமாக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
211 பயணிகள் மற்றும் 18 விமான பணியாளர்களுடன் லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி இன்று (21-5-2024) அதிகாலை சுமார் 3 மணிக்கு புறப்பட்டது.
இந்த விமானம் 11 மணி நேர பயணத்திற்குப் பிறகு அந்தமான் கடலுக்கு மேல் பறந்து சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக காற்று திசை மற்றும் வேகம் மாறுபாட்டால் திடீரென 6000 அடி பள்ளத்தில் இறங்கியது.
37000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஐந்தே நிமிடத்தில் 31000 அடிக்கு இறங்கியதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் நிலை தடுமாறி தூக்கிவீசப்பட்டனர்.
இதில் சீட் பெல்ட் போடாமல் இருந்த பலரது தலை விமானத்தின் மேற்கூரையில் மோதி மண்டை உடைந்தது.
இதனால், மின்விளக்குகள் உடைந்ததுடன் மேலே வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளும் கீழே இருந்த பயணிகள் மீது விழுந்து காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும் 30 பேர் காயமடைந்ததாகவும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அடிபட்ட அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 12 பேர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர்.
வானிலை மாற்றம் குறித்து ராடார் மூலம் முன்கூட்டியே அறியும் பைலட்டுகள் விமானத்தை காற்றின் மாறுபாட்டிற்கு ஏற்ப தாங்கள் பறக்கும் வேகம் மற்றும் உயரத்திற்குப் ஏற்ப 5 அல்லது பத்து நிமிடங்களில் தங்கள் பாதையை மாற்றிக்கொள்ள முடியும்.
இருந்தபோதும், எதிர்பாராத சில திடீர் வானிலை மாற்றங்களால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் அதனால் பயணிகள் சீட் பெல்ட் அணிந்தே பயணம் செய்வது அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.