டெல்லி: அமைச்சா் பொன்முடி ஜாமீன் பெற மேலும் இரு வார கால அவகாசம்  அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

 சொத்துக் குவிப்பு வழக்கில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி குற்றவாளி என கூறி 3 ஆண்டுகளை சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்த நிலையில்,  இதை எதிர்த்து தொடர்ப்பட்ட மேல்முறையீடு வழக்கில், பொன்முடி மீதான தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், அவருக்கு  ஜாமின் பெறும் வகையில், அவரை கைது செய்ய தடை விதித்தது.  இந்த நிலையில்,  பொன்முடி ஜாமின் பெற மேலும் 2 வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சோ்த்ததாக அவா் மீதும், மனைவி விசாலாட்சி உள்பட 5 போ் மீதும் அதிமுக ஆட்சியில் ஊழல் தடுப்புப் பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி தீா்ப்பு கூறப்பட்டு போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவா்கள் விடுவிக்கப்பட்டனா். இதற்கு எதிராக தமிழக ஊழல் தடுப்புப் பிரிவு மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து பொன்முடிக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி  கடந்த  (2024) ஜனவரி மாதம் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த சிறைத் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரும் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தாக்கல் செய்தாா். ஊழல் தடுப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி, விசாரணை நீதிமன்றத்தில் சரணடைவதிலிருந்தும் விலக்கு அளித்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை மீண்டும் கடந்த மாா்ச் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி குற்றவாளிகள் என அறிவித்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை நிறுத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் முன்பாக ஒரு மாதத்திற்குள் அணுகி ஜாமீன் பெறலாம் என்றும், அதுவரை சரணடைவதற்கு வழங்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

தற்போது ஜாமீன் பெற கொடுத்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க உச்சநீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மேலும் 2 வார கால அவகாசம் வழங்கி நீதிபதி அபய் எஸ். ஒகா அமா்வு உத்தரவிட்டதோடு, இது தொடா்பான வழக்கையும் வெள்ளிக்கிழமை முடித்துவைத்தனா்.