டில்லி
சி ஏ ஏ வுக்கு எதிராகப் பேசியமைக்காக டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இந்து மற்றும் சீக்கிய அகதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்/
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. கடந்த 11- ஆம் தேதி, சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டு இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்கிறது. இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,
”ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதன் மூலம் பா.ஜ.க. தங்களுக்கான ஒரு வாக்கு வங்கியை உருவாக்க முயல்கிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்கு வந்து குடியேறுபவர்களுக்கு இங்கு வேலை மற்றும் வீடுகள் வழங்கப்படும். அது இங்குள்ள உள்ளூர் மக்களைப் பாதிக்கும்”
என்று தெரிவித்தார்.
இன்று கெஜ்ரிவாலின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து இந்து மற்றும் சீக்கிய அகதிகள் டில்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்தின் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள்.கெஜ்ரிவால் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்,
“மோடி அரசாங்கம் எங்களுக்கு குடியுரிமை வழங்கும்போது, இவர்களுக்கு வேலை மற்றும் வீடுகளை யார் கொடுப்பார்கள்? என்று கெஜ்ரிவால் கேட்கிறார். அவருக்கு எங்கள் வலி புரியவில்லை”
என்று தெரிவித்தனர்.