பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் செயல்பட்டு வந்த பிரபலமான உணவகமான ‘ராமஸ்வரம் கஃபே’யில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் பலர் காயமடைந்த விவகாரம் நாடு முழுவதும அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, காவல்துறை விசாரயையை முடுக்கி விட்டுள்ளதுடன், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன,.
இந்தியாவின் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற உணவகமான ‘ராமேஸ்வரம் கஃபே’யில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 1) வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேருக்கு மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு காவல்துறை தெரிவித்தது.
முற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத ஒருவர் வெடிகுண்டு அடங்கிய பையை உணவகத்தில் விட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 25 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்கக்கூடும் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதற்கு முன்பு அவர் அந்த உணவகத்தில் உணவு அருந்தியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், முகமூடி அணிந்திருந்த அந்த ஆடவர் பேருந்திலிருந்து இறங்கி, இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 11.30 மணி அளவில் உணவகத்துக்குள் நுழைந்ததாகக் கண்காணிப்பு கேரமாக்களில் பதிவான காட்சிகள் காட்டுகின்றன.
இந்தக் காணொளி காட்சிகளைப் புலன்விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த நபர், ஒரு தட்டு ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு தம்முடன் கொண்டு வந்த பையை அங்கேயே விட்டுவிட்டு அந்த ஆடவர் உணவகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த பையில் இருந்த பொருள்தான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, வெடித்ததாக அதிகாரிகள் கூறினர். விசாரணையில் அது வெடிகுண்டு என்பதும் தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து வெடிகுண்டு வைத்த நபரை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ள கர்நாடக காவல்துறை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முகமூடி அணிந்திருந்த அந்த ஆடவரை அடையாளம் காண பெங்களூரு காவல்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
வெடிகுண்டுச் சம்பவம் குறித்து மத்திய குற்றவியல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்துவதாகவும் சந்தேக நபரைத் தேடிப் பிடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் , சந்தேக நபர் ஓரிரு நாள்களில் கைது செய்யப்படுவார் என்று கர்நாடாகத் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டோருக்கு ஏற்பட்ட காயங்களைப் பார்க்கும்போது தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சக்திவாய்ந்ததல்ல என்றும் குறைந்த தீவிரமுடையது என்றும் பெங்களூருவில் உள்ள புரூக்ஃபீல்ட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தப்ப முடியாது என்றும் அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
வெடிகுண்டுத் தாக்குதலை அடுத்து, பெங்களூரு உயர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.