திருவனந்தபுரம்

ரும் 22 ஆம் தேதி முதல் கேரள திரையரங்குகளில் புதிய மலையாள படங்கள் திரையிடப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள திரையரங்க அதிபர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே புதிய மலையாள படங்களை ஓ.டி.டி.யில் வெளியிடும் முடிவில் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. திரையரங்கு உரிமையாளர்கள் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 42 நாட்களுக்கு பிறகுதான் ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உள்ளனர். 

பல தயாரிப்பாளர்கள் இதை ஏற்றுக்கொண்டாலும்  இந்த நிபந்தனையை சில தயாரிப்பாளர்கள் மதிக்காமல் அடிக்கடி மீறி வருவதாகச் சர்ச்சைகள் கிளம்பின. மோகன்லால் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த மலைக்கோட்டை வாலிபன் படத்தை நிபந்தனையை மீறி முன்கூட்டியே ஓ.டி.டி.யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். திரையரங்கு அதிபர்களுக்கு இது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எனவே இந்த பிரச்சினை குறித்து அவசர கூட்டம் நடத்தி ஆலோசித்தனர் அதில் நிபந்தனைகளை ஏற்காமல் முன்கூட்டியே ஓ.டி.டி. தளத்தில் படங்களை வெளியிடுவதைக் கண்டிக்கும் வகையில் வரும் 22 ஆம் தேதி முதல் புதிய மலையாள படங்களைத் திரையரங்குகளில் திரையிட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். இந்த அறிவிப்பு மலையாள பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.