டில்லி

டில்லியில் இன்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர்.

 

கடந்த டிசம்பர் மாதம் 3, 4 தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாக அதி கனமழை பெய்தது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18ம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தின் இந்த பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என பிரதமருக்குக் கடிதம் எழுதினார். இன்னும், மிக்ஜம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்குத் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இன்னும் நிதி ஒதுக்கப்பட வில்லை எனவே, தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரண தொகையை வழங்கக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு முடிவு செய்தனர்.

அவர்கள் அமைச்சரைச் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கேட்டிருந்தனர்.   இன்று தமிழக எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கவுள்ளனர். சந்திப்பின் போது அவர்கள் மிக்ஜம் புயல் பாதிப்பு மற்றும் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியை வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளனர். அப்போது தமிழக அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வலியுறுத்த உள்ளனர்.