சூயஸ் கால்வாயில் இருந்து செங்கடல் வழியாக கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் சேவையில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலகில் விலைவாசி உயர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டு ராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
காசா மீதான தாக்குதலை கண்டித்து ஏமனில் இயங்கிவரும் ஹவுதி தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதுடன் செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை அச்சுறுத்தும் விதமாக அவற்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கடந்த ஓரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
செங்கடல் வழியாக சரக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளதை அடுத்து ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிக் கொண்டு செல்வதால் டன் ஒன்றுக்கு 3000 முதல் 4000 ரூபாய் வரை கூடுதலாக செலவாகிறது.
இதனால் விலைவாசி உயரும் எனவும் உலக பொருளாதாரம் சீர்குலையும் என்றும் கூறப்படுவதை அடுத்து இதை சமாளிக்கும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
ஆஸ்திரேலியா, கனடா, நெதர்லாந்து ஆகிய நட்பு நாடுகளின் உதவியுடன் ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவம் மற்றும் கடற்படை கப்பல்கள் இணைந்து இன்று விமான தாக்குதல் நடத்தியுள்ளது.
அரபிக்கடலில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையிடம் அமெரிக்கா விளக்கமளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை முற்றிலும் அழித்து செங்கடல் வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்து சுமூகமாகும் வரை அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை தொடரும் என்று கூறப்படுகிறது.