இஸ்லாம்பாத்

பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட  மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதில் ஒரு பகுதியாக நாட்டின் அரசியலமைப்பு  சட்டத்தை அவர் முடக்கினார்.  கடந்த2013-ம் ஆண்டு அவர் மீது  தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக என கூறி, முஷரப் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாய் சென்று பின்னர் அங்கேயே  தங்கிவிட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி அன்று தேச துரோக வழக்கில் முஷரப்புக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் சிறப்பு  நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து முஷரப் தரப்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. முஷரப்பின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி முஷரப் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

நேற்று மீண்டும் முஷரப்பின் மேல்முறையீட்டு மனு 4 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  விசாரணை முடிவில் நீதிபதிகள் முஷரப்பின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர்.