இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு:ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். இவர் 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்தார்.
தன்னுடைய பதவிக் காலத்தில் வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்று சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான்கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
ஆயினும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டு அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அடியாலா சிறைக்கு மாற்றப்பட்டார்.
இம்ரான்கானுக்குக் கடந்த மாத இறுதியில் இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. நேற்று அவரை விடுதலை செய்வதற்கான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்ட போதிலும் வேறு சில வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இன்று, மே 9ம் தேதி நடந்த வன்முறை மற்றும் ராணுவ தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பான வழக்கில் இம்ரான்கான் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
இன்று இம்ரான் மீதான வழக்கு பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு கருதி காணொலி வாயிலாக இம்ரான்கான் முன்னிறுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை நீதிபதி நிராகரித்து சிறைக்குச் சென்று இம்ரான்கானிடம் விசாரணை நடத்தலாம் என அனுமதி அளித்தார்.