மத்திய ஜப்பானில் உள்ள இஷிகாவா பிராந்தியத்தின் நோட்டோ தீபகற்பத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்து அந்த பகுதி இதுவரை மீளவில்லை.

ஜனவரி 1 ம் தேதி பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் இதுவரை 202 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 120 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜிமா உள்ளிட்ட கரையோர நகரங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியாத நிலை நீடித்து வருவதால் 3600 க்கும் மேற்பட்ட மக்கள் போதிய உணவுப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

தவிர, 400 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 30,000க்கும் அதிகமானோர் போதுமான உணவு கிடைக்காமல் கடும் குளிரில் நடுங்கி வருகின்றனர்.

இந்த பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

மேலும், ஜனவரி 1 நிலநடுக்கத்தை தொடர்ந்து இதுவரை 1000க்கும் மேற்பட்ட முறை சிறு சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.