சென்னை: தமிழ்நாட்டில் மேலும் தொழில் முதலீட்டுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்பெயின் உள்பட வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் ஜனவரி 28ந்தேதி தொடங்குவதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த இரு நாட்களாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில், தமிழகஅரசின் இலக்கை மிஞ்சி தொழில் முதலீடுகள் கையெழுத்தாகி உள்ளன. மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்பு இதுவரை 44 தொழில்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். 27 தொழில்சாலைகளை திறந்துவைத்துள்ளேன்.
சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு கிடைக்க உள்ளது. இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் அதிக முதலீடுகள் வந்துள்ளன. இந்தப் புதிய முதலீடுகள் மூலமாக கிட்டத்தட்ட 14.50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க உள்ளன” என்றதுடன், “சென்னையில் நடைபெற்ற இந்த உலக முதலீட்டாளர்கள மாநாட்டின் பெருமை என்றென்றும் பேசப்படும்” என்ற மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டின் 20 ஆண்டுகால வளர்ச்சிக்கு அடித்தளம் போடப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிலையில், மேலும் தொழில் முதலீட்டுக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜன. 28-இல் ஸ்பெயின் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்து உள்ளார். இந்த உலக முதலீட்டாளா்கள் மாநாடு, தொழில் துறையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தவர், இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு, தொழில் துறையினா் லாவோஸ் செல்கிறோம். அதன்பின், முதலீடுகளை ஈா்க்கும் வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செல்கிறாா். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈா்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மீட்டெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக மகத்தான வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஏற்றத்தாழ ஒரு லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளது. படித்த இளைஞர்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதில் முதல்வர் மிக தீவிரமாக செயல்பட்டு அதுபோன்ற வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார். இந்த மாநாட்டின் மூலமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே முதலமைச்சரின் கருத்து ஆகும். ஒரு டிரில்லியன் டாலர் என்ற கனவை நோக்கி உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருந்தார். முதல்வரின் வெளிநாட்டு பயணத்தை தொடர்ந்து பல முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது.
வெளிநாடு பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் நேரில் சென்றார். எதிர்வரும் வாரங்களில் புதிய ஒப்பந்தங்களும் வர உள்ளது. தென் தமிழகத்திற்கும், மேற்கு தமிழகத்திற்கும், டெல்டா மாவட்டத்திற்கும், வட தமிழகத்திற்கும் சென்னைக்கும் சேர்த்து அனைத்து பகுதிகளும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி இருக்க வேண்டும் என எண்ணியே இந்த முதலீடுகள் வரப்பெற்றுள்ளது.
2 நாட்களில் 600-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தமிழகத்துக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்க்க 28-ந் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின், ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அமெரிக்காவும் செல்ல இருக்கிறார். உலக பொருளாதார மாநாட்டுக்கு செல்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை அறிவுறுத்தி உள்ளார். இந்த மாநாட்டின் மூலம் தொழில், எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளிலும் முதலீடுகள் குவிந்துள்ளது. தோல் மற்றும் தோல் பொருட்கள் அல்லாத தொழிற்சாலையில் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வெற்றிகளை உலகிற்கு உரக்க சொல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.