திருப்பாவை – பாடல் 21 விளக்கம்
மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.
அந்தவகையில், மார்கழி மாதத்தின் 21 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 21
திருப்பாவை பாடல் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்ற முடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன்னடி பணியுமாப் போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.
பொருள்:
வள்ளலைப் போல கேட்டதும் பாலைப் பொழியும் பெரும் பசுக் கூட்டத்தைக் கொண்ட நந்தகோபரின் திருமகனே, அடியவர்களைக் காக்கும் அக்கறை உடையவனே, பெருமைகளைக் கொண்டவனே. இந்த உலகின் நிலையான சுடர் ஒளியே. நீ உறக்கத்தை விட்டு எழுந்து வருவாயாக. உன்னிடம் போரிட்டு உனது வலிமைக்கு முன்பு நிற்க முடியாமல் தோற்றவரெல்லாம் உனது அடியாராக மாறி உன் அடி பணிந்து வந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு உனது அடிகளைப் பற்றிப் பணிந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை.
அதேபோல ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்களும், உனது குணநலன்களைப் போற்றிப் பாட வந்து உன் மாளிகை முன்பு காத்திருக்கிறோம். துயில் எழுந்து வந்து எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.