அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த கெல்சி ஹாட்சர் என்ற பெண்ணுக்கு பிறந்தது முதல் இரண்டு கருப்பைகள் இருந்துவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு கருவுற்ற இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரண்டு கருப்பையிலும் தனித்தனி கரு உருவாகி இருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
0.3% வீதம் பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற அபூர்வமாக இரண்டு கருப்பைகள் இருக்கும் நிலையில் இவர் இரண்டிலும் கருவுற்றது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இரண்டிலும் பிரசவ வலி என்பது ஒரே நேரத்திலோ அல்லது வேறு வேறு நேரத்திலோ வரக்கூடும் என்றும், சில நிமிட இடைவெளியோ அல்லது வாரக்கணக்கில் கூட இடைவெளி ஏற்படக்கூடும் என்பதையும் உணர்ந்த மருத்துவர்கள் இது சிக்கலான பிரசவமாக இருக்கும் என்றும் இரண்டு பிரசவ வலிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் கெல்சி ஹாட்சர் மற்றும் அவரது கணவர் காலேப் ஆகியோரிடம் தெரிவித்தனர்.
ஆனால் இரண்டு கருவையும் சுமக்க கெல்சி ஹாட்சர் விரும்பியதை அடுத்து அவருக்கு டிசம்பர் மாத இறுதியில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன முதல் குழந்தை செவ்வாய் அன்றும் இரண்டாவது குழந்தை புதனன்றும் பிறந்ததாக தெரிவித்த மருத்துவர்கள் கெல்சி ஹாட்சர் மொத்தம் சுமார் 20 மணி நேரம் பிரசவ வலியில் அனுபவிக்க நேர்ந்ததாகக் கூறினர்.
பர்மிங்காம் நகரைச் சேர்ந்த கெல்சி ஹாட்சர் – காலேப் தம்பதிக்கு ஏற்கனவே 7 வயது, 4 வயது மற்றும் 2 வயதில் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தற்போது நான்காவதாக இரண்டு பெண் குழந்தைகளை பெற்ற கெல்சி ஹாட்சர் இதற்கு மேல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரட்டை கருப்பை கொண்ட பெண்… இரண்டிலும் கர்ப்பம் தரித்திருக்கும் அபூர்வம்…