நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்த விவகாரம் தொர்பாக கைது செய்யப்பட்ட மற்றொரு தரப்பைச் சேர்ந்த 6 பேர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டுள்ளது.
நெல்லை அருகே மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில், கடந்த அக்டோபர் 30-ம் தேதி இன்று மாலை அருகே உள்ள ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது, அந்த பகுதியில், மது அருந்தி கொண்டிருந்த ஆறு பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து தாக்கியதுடன், நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து அசிக்கப்படுத்தியது மட்டுமின்றி, பணம் மற்றும் செல்போன்களையும் பறித்துக் கொண்டது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேல் விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து தேசிய பட்டியல் இனத்தோருக்கான ஆணையம் விசாரணை மேற்கொண்டது. ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன், ஆலோசகர் ராமசாமி ஆகியோர் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தாக்குதலால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் இரண்டு இளைஞர்களையும் நேரில் சந்தித்து அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பட்டியலின இளைஞர்களை தாக்கிய கைதாகியுள்ள ஆறு பேரையும் குண்டர் சட்டத்தில் மாநகர காவல் துறை கைது செய்துள்ளது. அதன்படி நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பொன்னுமணி, முத்து என்ற நல்லமுத்து, லெட்சுமணகுமார், ஆயிரம், ராமர், சிவன் என்ற சிவா ஆகியோர் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ச.மகேஸ்வரி உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் தொடரும் சாதிய தாக்குதல்: பட்டியலின இளைஞர்கள்மீது சிறுநீர் கழித்து தாக்குதல்!