கோழிக்கோடு

பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபி மீது ஒரு பெண் பத்திரிகையாளரின் புகாரையொட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

 

நேற்று பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்  கேரளாவின் பிரபல நடிகருமான சுரேஷ் கோபி கோழிக்கோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு  பதிலளிக்கும்போது, மகளே (மோலே) எனக் கூறி நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார். இந்த நிகழ்வு பற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்தது.

சுரேஷ் கோபியின் செயலால், அந்த பெண் நிருபர் பின்னால் நகர்ந்து சென்று 2- ஆவது கேள்வியை கேட்டுள்ளார். சுரேஷ் கோபி அப்போதும் அவருடைய தோள் மீது தன்னுடைய கையை வைத்திருக்கிறார். அவருடைய கையை பெண் நிருபர் தள்ளி விடும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலானதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் சுரேஷ் கோபி சமூக ஊடகத்தில்,

”நட்பு ரீதியிலேயே அந்த பெண் நிருபரிடம் நடந்து கொண்டேன். அவர் அதனைத் தவறாக எண்ணினார் என்றால், அவருடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.அவர் இதனை மோசம் என உணருவார் என்றால், அவரிடம் இதற்காக மன்னிப்பு கோருகிறேன். வருந்துகிறேன்” 

எனப் பதிவிட்டிருந்தார்.

பெண் நிருபர் இது குறித்து.

“சுரேஷ் கோபி கேட்டுள்ள மன்னிப்பில் மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்று உள்ளது. எனவே அவருக்கு எதிராக சட்ட ரீதியாக அணுக உள்ளேன்” 

என்று தெரிவித்தார்.

கேரள பத்திரிகையாளர்கள் அமைப்பின் மாநில தலைவர் வினீதா மற்றும் பொதுச் செயலாளர் கிரண் பாபு ஆகியோர், தவற்றை ஒப்புக் கொண்டு சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதுபற்றி வெளியிட்ட ஊடக செய்தியில் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம் பற்றி கோழிக்கோடு நகர ஆணையாளரிடம் புகார் ஒன்றையும் அந்த பெண் நிருபர் அளித்திருந்தார். நடிகர் சுரேஷ் கோபி மீது பெண் செய்தியாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.