சென்னை

சென்னையில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த முதியவர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகச் சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரியும் மாடுகள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அண்மையில் ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் வீட்டு வாசாலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிக்கொண்டிருந்த பெண்ணை பசுமாடு முட்டியது.

அதிர்ச்சியடைந்த அப்பெண் தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்குள் ஓடி தப்பியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலானது.

கடந்த 18 ஆம் தேதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் சுந்தரத்தை மாடு முட்டியது.  இதனால் படுகாயமடைந்த முதியவர் சுந்தரம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுந்தரத்துக்குக் கடந்த 10 நாட்களாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இன்று மாடு முட்டியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சுந்தரம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாடு முட்டிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்