சென்னை
நாளை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆண்டு தோறும் தமிழகத்துக்கு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். தமிழகம் வடகிழக்கு பருவமழையின் மூலமே அதிக அளவில் மழையை பெரும். இந்திய வானிலை ஆய்வு மையம் தென் மேற்கு பருவமழை முற்றிலுமாக முடிவடைந்துள்ளதாகத் தெரிவித்துக் கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகத் தமிழகம் மழையைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வரும் 23-ம் தேதி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் வடகிழக்கு பருவமழை நாளை தமிழகத்தில் தொடங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.