சென்னை: போற்றத்தக்க ஆன்மீகப் புரட்சி; பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்  செய்யப்படும் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இது இந்த ஊரின் அடையாளமாக உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார்.  தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் அக்டோபர் 19ஆம் தேதி காலமானார். இவருக்கு வயது 82.

1970-களின் தொடக்கம் முதல் சக்தி பீடத்தை நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும் செய்துவந்த இவர், 1978-ல் முதன்முதலாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருகின்றன.

ஆதிபராசக்தி கோயிலில்  பெண்கள் மாதவிடாய் நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும்  வழிபடலாம் என்று  புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். பெண்களை கருவறைக்கு அனுமதித்த முதல் ஆன்மிகவாதியான பங்காரு அடிகளாருக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். மேலும், ஐய்யப்பன் கோவிலுக்கு ஆண்கள் இருமுடி கட்டிக்கொண்டு செல்வதைப் போல், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்ததனர்.

பங்காரு அடிகளார் ஆற்றிய சேவைக்காக மத்திய அரசு அவருக்கு 2019-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிதத்து உள்ளது.

பங்காரு அடிகாளர் மறைவுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என உலகம் முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சர்  முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள  இரங்கல் குறிப்பில், “மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.

ஆதிபராசக்தி பீடத்தை நிறுவி, அரை நூற்றாண்டிற்கும் மேலாக மிகச்சிறப்பாக நடத்தி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளையும் மக்களுக்கு வழங்கி வந்தார். அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் , மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்களே கருவறைக்குள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகரமான வழக்கப்படுத்தினார்.

கோயில் கருவறைக்குள் அனைத்துச் சாதியினரும் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதற்காக தி.மு.கழகம் பல ஆண்டுகளாகப் போராடி, அதனை நடைமுறைப் படுத்தியும் வரும் நிலையில், அனைத்துப் பெண்களையும் கருவறைக்குள் சென்று அவர்களே பூசை செய்து வழிபடச் செய்த பங்காரு அடிகளாரின் ஆன்மீகப் புரட்சி, மிகவும் மதித்துப் போற்றத் தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “நம்மைக் காக்கும் 48” திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காக மேல்மருவத்தூர் சென்றிருந்த போது, உடல்நலிவுற்றிருந்த பங்காரு அடிகளாரை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்து வந்தேன். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அடிகளார் தற்போது மறைவுற்றிருப்பது, அவரது பக்தர்களுக்கு ஒரு பேரிழப்பாகும். பங்காரு அடிகளாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பங்காரு அடிகளாரின் சேவைகளைப் போற்றும் வகையில், அரசு மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வு நடைபெறும்” என குறிப்பிட்டுள்ளார்.