அருள்மிகு லட்சுமி நாராயணி கோயில்,  திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்),  வேலூர்

சிதம்பரம் நடராசர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி, பழநி முருகன், புதுச்சேரி மணக்குள விநாயகர், திருப்பதி வெங்கடாசலபதி போன்ற பல பெரிய கோயில்களில் கருவறை விமானங்கள் தங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் சீக்கியர்களுக்குப் பொற்கோயில் உள்ளது.

பச்சைப்பசேலென்று பரந்து விரிந்த புல்வெளியினூடே கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஸ்ரீநாராயணி ஆலயம்.  வேலூர் ஸ்ரீபுரம் “லட்சுமி நாராயணி” கோயில் 5ஆயிரம் சதுர அடிபரப்பளவும் தங்கத்தால் இழைக்கப்பட்டுள்ளது. 1500 கிலோ தங்கத்தில், ரூ.350 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண் பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு “ஸ்ரீபுரம்” என்று பெயர் மாற்றப்பட்டது. “ஸ்ரீ” என்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணி பீடத்தையும் தரிசிப்பது அவசியம்.
மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. கருவறையில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்கக் கவசம், தங்கக் கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள். தங்கத்தில் தகதகக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் எட்டு ஐசுவரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
வேலூர் லட்சுமி நாராயணி கோயிலுக்குள் நுழைந்தவுடன் ஒரு தனி மண்டபமும், அதன் எதிரில் செயற்கை நீர் ஊற்றுக்களும் மனதைக் கவர்கிறது. இந்த மண்டபத்தின் வலதுபுறம் கோயிலின் உள்ளே செல்லும் பாதையும், இடதுபுறம் வெளியே வரும் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்ரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்ரம் போன்றே தெரியும்.
காலை 7 முதல் இரவு 8 மணிவரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும். இங்கு வரும் அனைவருக்கும் போதுமான அளவு பிரசாதம் தரப்படுகிறது.  கோயிலில் நுழைந்து, வெளியே வரும் வரை உள்ள பகுதி முழுவதும் இயற்கை எழில் சூழ, மிகவும் அமைதியாக அமைந்துள்ளது.
இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவைப் பகலாக்குகின்றன.
கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் கலர் கலராக காட்சியளிக்கின்றன. சுத்தமான காற்று வீசுகிறது. மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது என்று பெயர்க்குச் சொன்னாலும் ஒரு சுற்றுலாவில் கிடத்த மகிழ்ச்சி கிட்டும்.
கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியே சென்றதும் கோயில் மடப்பள்ளியில் செய்யப்பட்ட பிரசாதம் அனைவருக்கும் வழங்குகிறார்கள். சுத்தமான குடிநீரை கோயில் நிர்வாகமே கொடுக்கிறது.
வேலூரிலிருந்து தெற்கே ஊசூர் அணைக்கட்டு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் ஸ்ரீபுரம் உள்ளது.