சென்னை
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தன் கணவர் பாக்சிங் செய்யத் தயாராக உள்ளதாக வீரலட்சுமி கூறி உள்ளார்.
நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்திருந்த விவகாரத்தில், நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாகத் தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார்.
எனவே சீமானுக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. சீமான் வீரலட்சுமிக்கு எதிராகப் பல கருத்துகளை முன்வைத்தார்.
சமூக வலைத்தளங்களில் வீரலட்சுமியின் கணவர் கணேசன், சீமானை பாக்சிங்கிற்கு அழைப்பு விடுப்பதாக ஒரு ஆடியோ பரவியது. சீமான் இதற்குப் பதிலளித்து தாம் பாக்சிங்கிற்கு தயார் என்றும், இடம் மற்றும் நேரத்தை அறிவித்தால் உடனே வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போது இது குறித்து வீரலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில்,
”இப்போது நான் நின்று கொண்டிருக்கும் இடம் திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டம் தொட்டிக்கலை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மைதானம் ஆகும். இங்குதான், என் கணவர் கணேசனுடன் நீங்கள் (சீமான்) சண்டை போடுவதற்கான இடமாகத் தீர்மானித்திருக்கிறோம்.
வரும் 2024ம் ஆண்டு தை மாதம் காணும் பொங்கல் அன்று எனது கணவருக்கும், உங்களுக்கும் இங்குதான் சண்டை நடக்கப் போகிறது. நீங்கள் இந்த சண்டையில் பாக்ஸிங், கராத்தே, குங்பூ, மல்யுத்தம் என எந்த சண்டை வேண்டுமென்றாலும் செய்யலாம்.
எனது கணவர் அனைத்தையும் சமாளிக்கத் தயாராக இருக்கிறார். சண்டையில் யார் நாக்அவுட் ஆகி கீழே விழுகிறார்களோ, அவர்கள் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டும். போட்டி நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு என்ன பந்தயம் என்பது குறித்து அறிவிக்கிறேன்.”
என்று கூறியுள்ளார்.