டில்லி
இன்று பிரதமர் மோடி பி எம் விஸ்வகர்மா திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
செங்கோட்டையில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி, பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார்.மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. இனு நாடு முழுவதும் விஸ்வகர்மா ஜெயந்தி நாளை கொண்டாடப்படுவதால் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தைப் பிரதமர் மோடி இன்று டில்லியில் தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் ,
”பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய விரும்புகிறவர்கள் பொதுச் சேவை மையம் மூலம் https://pmvishwakarma.gov.in/ இணையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதன்படி பிஎம் விஸ்வகர்மா சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்படும். திட்டத்தில் இணைபவர்களுக்குத் திறன் மேம்பாடு பயிற்சி வழங்கப்படும்.
தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ரூ.15,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் குரு – சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புகளை உள்நாடு, சர்வதேச விற்பனை சங்கிலியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளர், காலணி செய்பவர், கொத்தனார், கூடை- பாய்- துடைப்பம் தயாரிப்பவர், கயிறு செய்பவர், பாரம்பரியமாகப் பொம்மைகள் செய்பவர், முடிதிருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள் ஆகியோர் பிஎம் விஸ்வகர்மா திட்டத்தில் இணையலாம்”.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.