சென்னை

ங்கிக் கணக்கில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.

தேர்தல் நேரத்தில் திமுக அறிவித்தபடி தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நாளை ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்து விடும்.

இதன் மூலம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெறப்போகிறார்கள். இதற்காக மொத்தம் 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் வந்திருந்த நிலையில் கிட்டத்தட்ட 57 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டப் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த திட்டம் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில், முன்னதாக தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்கும் வகையில் சீரற்ற முறையில் (Random) சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சோதனை வெற்றி பெற்றதால் அடுத்த கட்டமாகச் சீரற்ற முறையில் சில விண்ணப்பதாரர்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நாளை தொடங்கி வைக்கப்பட்ட பிறகு இந்த பணி முழுமையாக நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்களுக்கு பிரத்தியேக ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.