டெல்லி: ஜி20 மாநாடு மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண் முன்னே நிறுத்துகிறது என பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. அங்குள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9,10ம் தேதி நடைபெற உள்ள ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டு அரங்கத்தின் முகப்பில், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமி மலையை சேர்ந்த ஸ்ரீ தேவசேனா சிற்பக் கூடத்தில், அஷ்ட தாதுக்களால் உருவாக்கப்பட்ட 28 அடி உயர நடராஜர் சிலை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை, ஜி20 மாநாட்டில் முகப்பில் வண்ண விளக்குகள் அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
மத்திய அரசின் இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் உலகின் பெரிய நடராஜர் சிலை இங்கே நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழகத்தில் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீ.P.கண்டன், மற்றும் தேவ.சுவாமிநாதன் சகோதரர்கள் மற்றும் சக ஸ்தபதிகளின் உதவியோடு சுமார் 6 மாத கால உழைப்பில் வடிவமைத்துள்ளனர்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் கலாச்சார துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால் பாதுகாப்புப் பணிகளின் கருதி, இச்சிலை பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே டெல்லி கொண்டு செல்லப்பட்டது.
சிலையின் மீதம் இருந்த 25 சதவீத பணிகளை சுவாமி மலையிலிருந்து 15 ஸ்தபதிகள், புதுடெல்லிக்குச் சென்று, அந்தச் சிலையை முழுமையாக வடிவமைத்தனர். இந்த பிரம்மாண்ட சிலை 10 கோடி ரூபாய் செலவில், வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை, ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இந்திய நாட்டின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரகதி மைதானத்தில் நடக்க விருக்கும் ஜி20 மாநாட்டின் ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை மாநாடு நுழைவாயிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இது குறித்து, பிரதமர் மோடி எக்ஸ் சமூகவலைதளங்களில் தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், பாரத மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான நடராஜர் சிலை, நமது வளமான கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் கூறுகளை கண்முன்னே நிறுத்துகிறது. ஜி20 உச்சி மாநாட்டிற்காக உலக நாடுகள் ஒன்று கூடும்போது, இது இந்தியாவின் பழங்கால கலைத்திறன் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஒரு சான்றாக அமையும்.
என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளழர்.