சென்னை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத  அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை என்ஐஏ அதிகாரிகள் எடுத்துள்ளனர். இது தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரை என்ஐஏ அமைப்பினர் வேட்டையாடி வருகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் கோவை குண்டு வெடிப்பு உள்பட பல்வேறு பயங்கரவாத செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.   தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாத அமைப்பினர் தமிழ்நாட்டில் முகாமிட்டு இருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் கூறி வரும் நிலையில், அதை உறுதிப்படுத்தி வகையில் பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். இவர் சென்னையின் பாடி பகுதியில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சுற்றி வளைத்து, என்.ஐ.ஏ. போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த பயங்கரவாதி,  கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச்சேர்ந்த சீயித் நபீல்அகமது என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவெ கேரள மாநிலத்தில் நடைபெற்ற வழக்கு உள்பட பல பயங்கரவாத செயல்களில் சம்பந்தப்பட்டுள்ள இவர் உள்பட பலரை என்ஐஏ தேடி வந்த நிலையில்,  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச்சேர்ந்த ஆசீப்  மற்றும் கேரளாவின் திருச்சூர் பகுதியைச்சேர்ந்த சீயித் நபீல்அகமது என்பவரை என்.ஐ.ஏ. போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருச்சூர்  ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்து வந்த  சீயித் நபீல்அகமது  எனபவரை சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சென்னையில் பதுங்கி இருந்து கொண்டு, போலி ஆவணங்கள் மூலம் நேபாள நாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சித்து வந்த நிலையில், அவரை என்.ஐ.ஏ. போலீசார் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஐ.எஸ். அமைப்பு தொடர்பான டிஜிட்டல் ஆவணங்களை என்.ஐ.ஏ. போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் கேரளா கொண்டு செல்லப்பட்டு, தீவிர விசாரணைக்கு பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இவர் பல மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்ததாகவும், தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளில் மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், போலி பாஸ்போர்ட்டு எடுக்க தமிழ்நாட்டில் மறைந்த இருந்து வந்த நிலையில், கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார் என்று தெரிவித்து உள்ளது.

கைதான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஏற்கனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த  ஆசிஃப் என்பவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், தற்போது மற்றொரு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.