சென்னை: ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் சட்டசபை அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்படி ஏற்கனவே, 10 கோவில்களில் 1,230 கோடி ரூபாயில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
நடப்பு ஆண்டு அறிவிப்பின்படி 5 கோவில்களில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தவர், ரூ.1,430 கோடி மதிப்பீட்டில் 15 கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்ல.
மேலும், கரூர், அய்யர் மலை, சோளிங்கர் நரசிம்மர் கோவில்களில், ரோப் கார் பணிகள் நிறைவு பெற்றுள்ளன, விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் என கூறியவர், திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கோரக்குட்டை மலைக் கோவில்களில் ரோப்கார் சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
45 கோவில்களில் நடந்து வரும் குளங்கள் மேம்படுத்தும் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்த கூட்டத்தில், அமைச்சருடன் அறநிலைத்துறை முதன்மைச் செயலர் மணிவாசன், சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், கமிஷனர் முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.