சென்னை
கோடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கனகராஜின் அண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் உள்ளது. கடந்த2017 ஆம் ஆண்டு இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்களை சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் நடத்தியது.
இவர்களில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விடவே காவல்துறையினர் சயான், வாளையார் மனோஜ் உள்படக் கேரளாவை சேர்ந்த 10 பேரைக் கைது செய்தனர். ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் கனகராஜின் அண்ணன் தனபால் செய்தியாளர்களிடம்,
”நான் எனது தம்பி கனகராஜ் கோடநாடு சம்பவத்தில் ஈடுபட்டுத் திரும்பிய நேரத்தில், பெருந்துறையில் வைத்துச் சந்தித்தேன். எடப்பாடி பழனிச்சாமி கூறியதால் கோடநாடு பங்களாவில் இருந்து, 5 பெரிய பைகளை எடுத்து வந்ததாகக் கூறினார். அவற்றில் ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன.
கனகராஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறிய நிலையில் ஆத்தூரில் விபத்தில் உயிரிழந்தார். ஆகவே எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை ஆகும் .
எடப்பாடி பழனிசாமியை வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு இருக்கிறது.
எனக்கு முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் எனக்கு உரிய பாதுகாப்பைக் கொடுப்பார் என்று நம்புகிறேன். உரிய விசாரணை நடத்தி விரைவில் குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும்””.
என்று கூறி உள்ளார்.