சென்னை: கச்சத்தீவு குறித்த வரலாறு தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுதொடர்பான விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதுபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் கச்சத்தீவு குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்தார். கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், கச்சத்தீவு, திமுக ஆட்சி காலத்தில் மறைந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்தபோது, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. ஆனால், அதை மறைக்கும் வகையில் முதலமைச்சர் பேசியிருப்பதை எதிர்க்கட்சிகள் கண்டித்து உள்ளன.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கச்சத்தீவு தாரை வார்ப்பு தொடர்பாக ஒப்பந்தம்தான் போடப்பட்டது என்றும், சட்டம் இயற்றப்படவில்லை என்றும், கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதற்கான ஆதாரங்களை தந்தவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த திரு. மு. கருணாநிதிதான் என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை கண்டித்து அப்போது நாடாளுமன்றத்தில் தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்றும், கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அ.தி.மு.க. என்றும், அன்றிலிருந்து இன்று வரை அ.தி.மு.க. தான் துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்தப் பேச்சினைப் பார்க்கும்போது, அவர் அடிக்கடி சொல்லும் “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது. இராமேஸ்வரத்திற்கு வட கிழக்கே 10 மைல் தொலைவில் உள்ள கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதி என்பதையும், 285.20 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவின் சர்வே எண் 1250 என்பதையும், இதனை பரம்பரை பரம்பரையாக தமிழ்நாட்டு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர் என்பதையும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார் என்பதையும், ஆண்டுதோறும் இங்கு நடக்கும் விழாவிற்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம் என்பதையும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்பதையும் வரலாற்றுப் பதிவேடுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.
இவையெல்லாம், கச்சத் தீவு மீது இந்தியாவிற்கு உள்ள பறிக்க முடியாத உரிமைகளுக்கு சான்றாக விளங்குகின்றன. 1974 ஆம் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள், தொன்றுதொட்டு கச்சத்தீவின் அருகில் மீன்பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்தந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் திரு. மு. கருணாநிதி அவர்கள். கச்சத்தீவு தாரைவார்ப்பினை தடுத்து நிறுத்த முதலமைச்சர் என்ற முறையில் திரு. கருணாநிதி எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
1960 ஆம் ஆண்டுக்கு முன்பு, 1950-களில், மேற்கு வங்காளத்தில் உள்ள பெருபாரி என்ற பகுதியை அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு கொடுக்க மத்திய அரசு முயன்ற போது, அதை மேற்கு வங்க மாநில அரசு எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அப்போதைய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரு. B.C. ராய், இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்திய நாட்டுக்குச் சொந்தமான ஒரு பகுதியை அந்நிய நாட்டிற்குக் கொடுப்பது தொடர்பான உடன்பாட்டை நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலோடு இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்” என 1960 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க அரசின் இந்த சமயோசித நடவடிக்கை காரணமாக, பெருபாரி பகுதி இன்றும் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினை மேற்கோள் காட்டி 1974 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு செய்திருந்தால், கச்சத் தீவு இன்றும் கூட, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும்.
ஆனால் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த திரு மு. கருணாநிதி அவர்கள் இதைச் செய்யத் தவறி விட்டார். இந்த வரலாற்றை படித்துத் தெரிந்து கொள்ளாமல், தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், அதையும்மீறி கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறுவதும் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது.
இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1974-ல் கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல கேள்விக்கணைகளை தொடுத்தபோது, ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியவர் திரு. மு. கருணாநிதி அவர்கள். ஆனால், ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு திரு. கருணாநிதி அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்.
குறைந்தபட்சம் இரண்டு முறை மிக விரிவான அளவில் மத்திய அரசு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்களுடன் விவாதித்ததாக அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஸ்வரண் சிங் மாநிலங்கள் அவையில் பேசியிருப்பதை மாண்புமிகு அம்மா அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்
எனவே, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அவர்களுக்கு தெரியாது என்ற வாதம் உண்மைக்குப் புறம்பானது. கச்சத்தீவு தாரை வார்க்கப்படப் போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவோ அல்லது தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி தாரைவார்ப்பினை தடுக்கவோ தி.மு.க. அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை.
மாறாக ஒப்பந்தம் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பெயரளவிற்கு, சம்பிரதாயத்திற்கு, மென்மையான முறையில் 21-08-1974 அன்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின்மீது பேசிய திரு. ஆலடி அருணா அவர்கள், மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா என்று அப்போதைய முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்களைக் கேட்டபோது, “வெளியுறவுத் துறைச் செயலாளர் கேவல் சிங் அவர்களை நான் டெல்லியில் சந்தித்தபோது இதைப் பற்றி அவர் என்னிடம் பேசினார். இதை ஆலோசனை என்று வைத்துக் கொண்டாலும் கூட நான் அவரிடம் சொன்னது; “தமிழ் மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளாது.
கச்சத்தீவு இந்தியாவுக்கே, தமிழகத்திற்கு சொந்தமாக இருக்க வேண்டும் என்று எடுத்துச் சொல்லி மறு நாள் பிரதமரை சந்தித்தபோது, இதைப் பற்றி குறிப்பிட்டு சொன்னேன்” என்று திரு. கருணாநிதி அவர்கள் கூறியிருக்கிறார். இவையெல்லாம் சட்டமன்ற நடவடிக்கைக் குறிப்புகளில் இடம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் படித்து கச்சத்தீவு வரலாற்றினை தெரிந்து கொள்ளாமல், மனம் போன போக்கில் பேசுவது முதலமைச்சருக்கு அழகல்ல.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஒரே கட்சி அதிமுக தான் என்று தி.மு.க. தலைவர் கூறியிருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் தான் தி.மு.க. தலைவர் குறிப்பிடுகிறார் என்று கருதுகிறேன்.
கச்சத்தீவு தாரைவார்ப்பு ஒப்பந்தம் குறித்து முன்கூட்டியே தெரிந்தும் அதை எதிர்த்து மிகப் பெரிய அளவில் போராடாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்காமல் மாபெரும் துரோகத்தை செய்த மாநில அரசினைக் கண்டிக்காமல், அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசை மட்டும் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால்தான் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த உண்மையை மறைத்து பொத்தாம் பொதுவாக அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது என்பது உண்மைக்குப் புறம்பான தகவல்.
கச்சத்தீவு பிரச்சனையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம். 2008 ஆம் ஆண்டு கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று மாண்புமிகு அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபோது, அதனை ஆமோதித்து பதில் மனுவை தாக்கல் செய்யாமல், “… uniform stand has to be taken both by the Central and State Governments” m கருத்து தி.மு.க. அரசால் அப்போது தெரிவிக்கப்பட்டதுதான் துரோகம்.
இந்தத் துரோகங்களை செய்தது தி.மு.க. கச்சத்தீவில் மட்டுமல்ல, காவிரி நீர்ப் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, மாநில சுயாட்சி, மத்திய-மாநில வரிப் பங்கீடு என எல்லாவாற்றிலும் பல துரோகங்களை செய்த கட்சி தி.மு.க. இப்பொழுது வாய்கிழிய பேசும் தி.மு.க. தலைவர், 17 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அமைச்சரவையிலே வளம் கொழிக்கும் இலாக்காக்களை வைத்துக் கொண்டிருந்தபோது கச்சத்தீவு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை?
ஆண்டு வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து மீண்டும் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்து இருக்கிறார் தி.மு.க. தலைவர், இது பலிக்காது. மக்கள் தி.மு.க.வை பற்றி நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். வருகின்ற மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வீழ்ச்சியை தி.மு.க. சந்திக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுபோல பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தமிழக முதல்வரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை மிஞ்சிவிட்டது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் குடும்ப ஆட்சி பயிற்சிப் பாசறையில், வழக்கம்போல, யாரோ எழுதிக் கொடுத்த துண்டுச் சீட்டைப் பார்த்து, அதில் என்ன எழுதியிருக்கிறது என்றே தெரியாமல் கடகடவென்று ஒப்பித்துவிட்டுப் போயிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
1964 ஆம் ஆண்டு புயலில் சீர்குலைந்த தனுஷ்கோடி நகரைச் சீரமைக்க, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள்தான் முதன்முதலாக முயற்சி எடுக்கிறார் என்பதைத் தெளிவாக ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின். 1964க்குப் பிறகு பல முறை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, மருமகனுக்கும், பேரனுக்கும், மகளுக்கும் மத்திய அமைச்சர் பதவியும், எம்பி பதவியும் வாங்கிக் கொடுப்பதில் மட்டுமே குறியாக இருந்ததால், தமிழக மக்களின் பிரச்சினை குறித்துப் பேசவோ செயல்படவோ நேரமில்லை என்பதை வெளிப்படையாகக் கூறியதற்கு நன்றி முதலமைச்சர் அவர்களே.
துண்டுச் சீட்டில் எழுதியிருப்பது என்னவென்று மேடைக்குப் பேச வந்தால், இப்படித்தான் தெரியாமல் பல ஒப்புதல் வாக்குமூலங்கள் கொடுக்க வேண்டியிருக்கும்.
தமிழக மீனவ சகோதரர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 2014 பத்து ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் நாள்தோறும் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, எம் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த உங்கள் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.
உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடுபடாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு, பாரதப் பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது. ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பாரதப் பிரதமர் மோடி தான்.
1967 ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை தமிழகத்தில் ஆட்சியிலிருந்தும், மத்திய அரசில் பல முறை அமைச்சர் பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை என்பது உங்களுக்கே வெட்கமாக இல்லையா ஸ்டாலின் அவர்களே? மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி ஞாபகம் வராதது அதிசயமே.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிஸான் திட்டம், காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ரூ.2820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம், தடைக்கால நிவாரணம் 8000 ரூபாய் வழங்குவோம் என உங்கள் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா?
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும் வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் திமுககாரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.
மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது திமுகவுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும் என தெரிவித்துள்ளார்.