செஞ்சி-யில் இருந்து மாந்தாங்கல் வரை புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று துவங்கி வைத்தார்.
செஞ்சியில் இருந்து களவாய் கூட் ரோடு, நெகனூர், தொண்டூர், வெடால், தாமனூர் வழியாக மாந்தாங்கல் செல்லும் இந்த பேருந்து வசதி இதுவரை பேருந்து வசதியே இல்லாமல் இருந்த அந்த கிராம மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சி பணிமனையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்த பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்ததுடன் இந்தப் பேருந்தில் ஏறி பயணம் செய்தார்.
இதுவரை தாமனூர் வரை இயக்கப்பட்டு வந்த இந்த பேருந்து இனி இரவு நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் வரை சென்று இரவில் அங்கு நிறுத்தப்படும். பின்னர் காலையில் அங்கிருந்து புறப்பட்டு செஞ்சி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து சேவைக்கு மக்களிடையே உள்ள வரவேற்பைப் பொறுத்து அதிகப்படியான சேவைகள் வழங்குவது குறித்தும் செல்லப்பிராட்டி, பென்னகர் ஆகிய மாற்று வழித் தடத்தில் பேருந்து சேவை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு பகுதியாக இருந்து வரும் இந்த கிராமத்திற்கு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டிருப்பது குறித்து மாந்தாங்கல் கிராம மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.