ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்முறையாகத் திருநங்கைக்குப் பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர் கிரேட்டர் முனிசிபல் கார்ப்பரேஷன் மூலம் முதல் முறையாகத் திருநங்கைக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூரைச் சேர்ந்த நூர் ஷெகாவத்துக்கு பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குநரும், தலைமைப் பதிவாளருமான (பிறப்பு மற்றும் இறப்பு) பன்வர்லால் பைர்வா,இந்த பிறப்புச் சான்றிதழை வழங்கினார்.
இனி ஆண் மற்றும் பெண் பிறப்பு பதிவுகளுடன், திருநங்கைகளின் பிறப்பு பதிவுகளும் மாநகராட்சி போர்ட்டலில் கிடைக்கும் என்று பன்வர்லால் பைர்வா கூறினார். மேலும் திருநங்கைகள் தங்கள் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வுத் திட்டமும் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
நூர் ஷெகாவத்தின் பாலினம் பிறப்பின் போது ‘ஆண்’ என்று பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நூர் ஷெகாவத் ஆங்கில வழிப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று தற்போது திருநங்கைகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
நூர் ஷெகாவத் மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் மற்றும் பெண்களின் பதிவேடுகளுடன் திருநங்கைகளின் பதிவுகளை அரசு பராமரிக்க இந்த முயற்சி உதவும் என்று கூறி உள்ளார் இவர் தற்போது திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரிகளை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார்.