சென்னை

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாஜக தலைவர் அண்ணாமலையைக் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

இன்று சத்தியமூர்த்தி பவனில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் நினைவுநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்

செய்தியாளர்களிடம் இளங்கோவன்,

”இந்தியாவில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது இந்தியப் பிரதமர் மோடி வெளிநாடுகளில் உல்லாசப் பயணம் சென்று தலைவர்களைக் கட்டிப்பிடித்து உற்சாகமாக இருக்கிறார்.  

இப்போது நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. மோடிக்கு மணிப்பூரில், கலவரம் தொடங்கி இரண்டு மாதங்களுக்குப் பிறகு தான் அது பற்றிய நினைவு வந்திருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைப் பயணம் போவதாகச் சொல்கிறார்கள். ஆனால் நடைப்பயணம் செல்பவர்கள் எல்லாம் ராகுல்காந்தி ஆகிவிட முடியாது. நாடு முழுவதும் கால்நடையாகச் சென்று ராகுல்காந்தி மக்களைச் சந்தித்தார். அண்ணாமலை கார் பயணம் செல்ல உள்ளாராம்.

அவரது பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  பாஜகவின் அண்ணாமலை வெளியிடும் தி.மு.க. பைல்கள் எல்லாமே பெயில் ஆகும். அண்ணாமலை தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்.

தமிழகத்தில் ஒரு கட்சியில், ஒரே தலைவராகவும் ஒரே தொண்டராகவும் இருக்கிற கட்சி ஜி.கே.வாசனுடையது; அவருடைய வீட்டில் இருப்பவர்களே அவருக்கு ஓட்டுப் போடுவார்களா எனத் தெரியவில்லை;  கொஞ்சம் மனசாட்சி இருப்பதால், அவரே அவருக்கு ஓட்டுப் போட மாட்டார்.  

இதுவே பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இதுதான் உதாரணம். பாஜகவினர் இந்த கட்சிகளை எல்லாம் அழைத்து வைத்து கூட்டணி எனச் சொல்கிறார்கள்.”

என்று கூறினார்.