சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்த வழக்கை விசாரித்த  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும் என கேள்வி எழுப்பியதுடன்,  ஆளுநருக்கு உத்தரவிட முடியும் எனக் கூறும் தீர்ப்புகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார்.  அவர் கைது செய்யப்பட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறியதால், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி தனியார் மருத்துவமனையில் (காவேரி மருத்துவமனை) அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு சமீபத்தில்  இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில்  ஓய்வில் உள்ளார்.

இதற்கிடையில்,  செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்றம், வேலைக்குப் பணம் பெற்றதாக வழக்குகள் உள்ளன என்பதைச் சுட்டிக்காட்டி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாகத் தமிழக ஆளுநர் மாளிகை அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, அமைச்சரை தன்னிச்சையாக நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில்,  செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கிய உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.  அவரது மனுவில், “அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை ஆளுநர் மறுபரிசீலனை செய்ய முடியாது. மேலும் ஆளுநர் தனது முடிவு குறித்து ஆலோசனை பெற வேண்டிய அவசியமில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற   தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த வழக்கில் ஆளுநருக்கு எப்படி உத்தரவிட முடியும். செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு” எனக் கேள்வி எழுப்பினர்.

இதுபோன்ற விவகாரத்தில்,  ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தது போன்ற தீர்ப்புகள் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டதுடன், வழக்கை  அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தது. அதே போன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உள்ளிட்டோரின் வழக்குகளும் அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டன.