கொல்கத்தா

ன்று கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகத் தமிழகத்தை சேர்ந்த டி எஸ் சிவஞானம் பதவி ஏற்றார்.

டிஎஸ் சுப்பையா – நளினி என்னும் தமிழகத்தைச் சேர்ந்த  தம்பதியரின் மகனான டிஎஸ் சிவஞானம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி பட்டமும் மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் பி எல் சட்டப் படிப்பும் முடித்தவர் ஆவார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கி, கடந்த 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற தற்காலிக நீதிபதியாகப் பதவி ஏற்றார்.  இவர் கடந்த 2011-ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்று, கடந்த 2021ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், நாட்டின் மிகப் பழமையான உயர் நீதிமன்றமான கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டிஎஸ் சிவஞானம் இன்று மே 11 பதவி ஏற்றார்.  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆனந்த போஸ், அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, சபாநாயகர் பீமன் பேனர்ஜி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள், டிஎஸ் சிவஞானத்தின் குடும்ப உறுப்பினர்கள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தமது பதவி ஏற்புக்குப் பிறகு உரையாற்றிய தலைமை நீதிபதி டிஎஸ் சிவஞானம், “மேற்கு வங்க மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியுடன் பாடுபடுவேன்” எனத் தெரிவித்தார்.