நவ்ரோஜாபாத், மத்தியப் பிரதேசம்
ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், அவரது மகளை பா.ஜ.க.வை சேர்ந்த ராகுல் சித்லானி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் எனத் தெரிவித்து உள்ளார். பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளராக ராகுல் சித்ரானியை கடந்த ஆண்டு நவம்பரில் கட்சி நியமித்தது. தற்போது அந்த பதவியில் இருந்து அவரை அக்கட்சி நீக்கியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் அனுப்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்குச் சிறுமி சென்று உள்ளார். அப்போது ராகுலுடன் சிறுமி வீடியோ காலில் பேசியுள்ளார். , வீடியோ காலில் பேசும்போதே, அவதூறு பரப்பி விடுவேன் என சிறுமிக்கு அவர் மிரட்டல் விடுத்து ஆடைகளைக் களையும்படி கூறியுள்ளார். பயந்து போன சிறுமி, அவதூறு ஏற்படாமல் இருக்க அவர் கேட்ட விசயங்களைச் செய்து உள்ளார். அந்த நபர் இதை ஸ்கிரீன் ஷாட்டுகளாக எடுத்துக் கொண்டார்.
பின்னர், தன்னை வந்து எவ்வளவுக்கு எவ்வளவு சந்தித்து, பேசுகிறாயோ அதுவரை பாதுகாப்பாக இருப்பாய். இல்லையெனில் புகைப்படங்களை வைரலாக்கி விடுவேன் என ராகுல் மிரட்டி உள்ளார். சிறுமியைத் தொடர்ந்து அவர் மிரட்டி சிறுமியின் வீட்டுக்குப் பின்னால் அவரை சந்திக்க வரும்படி அழைத்தும் உள்ளார். மேலும் சிறுமி தனியாக இருப்பது பற்றி அறிந்ததும், தவறாகவும் நடந்து உள்ளார்.
அச்சிறுமி பள்ளிக் கூடத்திற்கும் மற்றும் காய்கறி வாங்கச் செல்லும்போதும் பின்னாலேயே சென்று உள்ளதால் அந்த சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி அவதூற்றுக்காகப் பயந்து, இந்த விவகாரம் பற்றி யாரிடமும், எதுவும் கூறாமல் இருந்து விட்டார். சிறுமி வீட்டை விட்டே வெளியே வர முடியாதபடிக்கு ராகுல் செய்ததும், நடந்த விசயங்களைத் தந்தையிடம் கூறியுள்ளார். தந்தை போலீசில் இதுபற்றி புகார் அளித்து உள்ளார் என எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது. வழக்குப் பதிவானதும் ராகுல் தப்பியோடியதால் காவல்துறை அவரை பிடித்து, கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். ராகுலிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.