நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏ.வி.எம். ஸ்டுடியோ பின்புறமுள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படுகிறது.

200 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றியுள்ள மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

1984 ம் ஆண்டு வெளியான தாவணிக் கனவுகள் படத்தில் அறிமுகமான மயில்சாமி, பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான கன்னிராசி படத்தில் மக்கள் மனதில் பதியும்படியான கேரக்டரில் தோன்றினார்.

1990 களில் சென்னையில் பிரபலமான இசைக் குழுக்களுடன் இணைந்து மேடையேறிய மயில்சாமி பலகுரல் மன்னனாக மக்களிடம் பிரபலமானதோடு திரைப்படங்களிலும் நடித்துவந்தார்.

தொடர்ந்து கமலின் அபூர்வ சகோதரர்கள், வெற்றிவிழா, மைக்கேல் மதன காமராஜன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

யதார்த்தமான நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் டப்பிங் மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் கலைஞராகவும் திரையுலகில் வலம்வந்த மயில்சாமி சக கலைஞர்கள் தன்னை நாடிவருபவர்கள் மட்டுமன்றி வறுமையில் பசியால் வாடும் பலருக்கும் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார்.

https://twitter.com/Troll_Cinema/status/1627157915743457280

57 வயதேயான மயில்சாமியின் திடீர் மறைவு திரையுலகை தாண்டி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மறைந்த மயில்சாமியின் உடல் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். மின்மயானத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.