சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு அறநிலையத்துறையின் கீழ் உள்ள 330 சிவாலயங்களில் நாளை சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. குறிப்பாக, 5 முக்கிய சிவாலயங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய விழா நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி, அதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்திலுள்ள 330 சிவாலயங்களிலும் நாளை இரவு முழுவதும் பூஜைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபற உள்ளது. குறிப்பாக,  மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், கோவை, பேரூர், அருள்மிகு பட்டீஸ்வர சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவாக நடத்தப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள சிவாலயங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பின்வரும் அறிவுரைகளை பின்பற்றுமாறு சார்நிலை அலுவலர்கலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18ஆம் தேதி மாலை முதல் 19ஆம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிவபெருமான் அருள் ஆற்றல், பெருமையை பறைசாற்றும் வகையில் சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்விதமாக பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மிக சமய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்

மகா சிவராத்திர கொண்டாடப்படும் திருக்கோயில்களில் உள்ள கோபுரங்கள், மதில்சுவர்கள், போன்றவற்றில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின் அலங்காரங்கள் செய்யப்பட வேண்டும்.

பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்யும் விதமாக உரிய வரிசை தடுப்பு வசதிகள், காவல்துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை, சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்த வேண்டும்.

பல்வேறுதுறைகளின் அலுவலர்களை தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மகா சிவராத்திரி திருவிழா நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்

மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுனை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரதநாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்களும் சேவார்த்திகளும் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்படி நிகழ்ச்சிகள் அந்ததந்த திருகோயில்களின் நிதி வசதிக்கு ஏற்படவும், உபயதாரர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும்.

கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்போது அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்

மகா சிவராத்திரி நிகழ்ச்சிகளில் கொரோனா நோய் தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி நடத்த வேண்டும்.

மகா சிவராத்திர விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்த விதமான புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்

பக்தர்கள் மற்றும் சேவார்த்திகள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்பட வேண்டும். இதுகுறித்து ஒலிப்பெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

330 சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா! அமைச்சர் சேகர்பாபு தகவல்..