சென்னை: வெளியூர்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனிமேல் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என  போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.


சென்னைக்கு வரும் பேருந்துகள் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி தாம்பரம் ரூட்டை புறக்கணித்து மதுரவாயல் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.. இதனால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம்,கிண்டி, அசோக்பில்லர், வடபழனி ஏரியாக்களில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த பிரச்னைக்கு தற்போது போக்குவரத்துத்துறை முடிவு கட்டியுள்ளது. அதன்படி இனி சென்னை நோக்கி வரும் அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்ந்து, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து கிளை மேலாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு  சுற்றறிக்கையில் அனுப்பப்பட்டு உள்ளது. அதில்,

விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தடையும் பஸ்கள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது.

தாம்பரம் மாநகர பஸ் நிறுத்தத்துக்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுநர், நடத்துனர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை, ஆசர் கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும்.

மேலும் மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பஸ்கள் மட்டும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.