சென்னை: “பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி; அவர் வந்தால், நான் சந்திப்பேன்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான ராஜீவ்காந்தி விடுதலைப்புலிகளால் கொடூரமாக குண்டு வைத்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தற்போது,  பிரபாகரன் உயிரோடு இருந்தால் மகிழ்ச்சி. அவரை சந்திப்பேன்” என தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி நிமிடத்துக்கு நிமிடம் அதிகமாகி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் எங்களோடு இணைந்து சிறப்பாகச் செயல்படுகிறார்கள். வரும் 14,15,16 ஆகிய தேதிகளில் நான் பிரசாரம் செய்யவிருக்கிறேன்.  இளங்கோவனுக்கு ஆதரவாக, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் தினேஷ் குண்டுராவ் 15-ம் தேதி பிரசாரம் செய்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25-ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார் என்றார்.

எங்களுடைய கூட்டணி கொள்கைரீதியிலான கூட்டணியாக இருக்கின்ற காரணத்தினால், எங்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க முறைப்படி த.மா.கா-வுக்குத்தான் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க எடுத்துக்கொண்டுவிட்டது. அந்தக் கூட்டணியின் தன்மையும் எங்கள் கூட்டணியின் தன்மையும் இதுதான். இதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் எங்களைப் பார்த்து, `தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் அடிபணிந்து நடக்கிறார்கள்’ என்கிறார். அது தவறான வாதம். வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதானி பங்குச்சந்தையில் ஆற்றிய ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் பெரிய போராட்டத்தை நடத்தியது. இது குறித்து பிரதமர் ஒரு வார்த்தைக்கூட சொல்ல வில்லை. நிதியமைச்சர், `பங்குச்சந்தை அதுவே தன்னை சரி பார்த்துக்கொள்ளும்’ என்று சொல்கிறார். செபி அதை கண்காணிக்கிறது என்று சொல்கிறார்.

ஆளுநர்கூட தமிழகத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிற உரிமைகளைத் தாண்டி பேசுகிறார். பா.ஜ.க-வின் மாநிலத் தலைவரோ அல்லது அகில இந்திய தலைவரோ பேசுவதைவிட மிக அதிகமாக அரசியல் பேசுகிறார். அவர் எய்ம்ஸ்ஸை கொண்டுவர முயற்சி செய்தால் என்ன… நேற்று ஒரு பெரிய குற்றச்சாட்டை சொல்லியிருக்கிறார்.  அதில், ‘தமிழகத்தில் தீண்டாமை கொடுமை அதிகமாக இருக்கிறது. தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். 7% குற்றவாளிகளுக்குத்தான் தண்டனை கிடைக்கிறது. அவர்களுக்கு வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 30% செலவு செய்யப்படாமல் இருக்கிறது’ என்று சொல்கிறார்.

தீண்டாமை இந்தியா முழுவதும் இருக்கிறது. முதன் முறையாக மதுரையில் காங்கிரஸ் தலைவர் வைத்தியநாத ஐயர் தீண்டத்தகாதவர்களை அழைத்துக் கொண்டு கோயில் பிரவேசம் செய்தார். 70 ஆண்டுகளுக்கு முன்பு அது கற்பனை செய்யக்கூடிய விஷயமா.

பிறகு பெரியார், காமராஜர் எவ்வளவு செய்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்பதற்காக 24 பேர் கொல்லப்பட்டனர். பா.ஜ.க ஆட்சியில்தான் நடந்தது. இதற்கு பிரதமர், அந்த மாநில முதல்வர் பதில் சொன்னார்களா… நீங்கள் இப்படி அதற்கெல்லாம் பதில் சொல்லாமல், சமூகநீதி கொடி கட்டி பறக்கும் தமிழகத்தை குறை சொல்வது என்ன பொருள்?

எனவே பா.ஜ.க தமிழகத்தில் திட்டமிட்டு ஆட்சி முறைக்கு எதிராக, பண்பாட்டுக்கு எதிராக, கலாசாரத்துக்கு எதிராக, வளர்ச்சிக்கு எதிராக அவர்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஊடகங்கள் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து பா.ஜ.க கவலைப்பட்டிருக்கிறதா… ஆளுநரை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மிகப்பெரிய சதி செய்கிறார்கள். அரசியல் கருத்துகளை மோடி, நட்டா, அண்ணாமலை சொல்லட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.